Wednesday, January 14, 2009

"நம்பிக்கை"

சென்ற பதிவில் "நண்பர்கள்" என்ற விடயத்தோடு உங்களைச் சந்தித்தேன். இன்று கிளிக்காகியது. "நம்பிக்கை" என்றதை எழுத வேண்டும் என்று. அதனால உடனே வந்துவிட்டேன்.

" நம்பிக்கை" அப்படி என்றால் என்னங்க..? மனுசன் மேல மனுசன் வைக்கிற நம்பிக்கை. வாங்கிற பொருளில் நாம வைக்கிற நம்பிக்கை. காதலன், காதலிமீதும், கணவன் மனைவி மீதும் மனைவி கணவன் மனைவி மீதும் அட இரண்டும் சேம் தாங்க மேட்டருக்கு வாங்க என்று யாரோ திட்டித்தீர்ப்பது போல என் ஞானம் சொல்லுறாள். அதுயாருங்க புதிசா ஞானம். அது யாரோ யாருக்குள் யாரோ...பாடல் போலத்தானுங்க..

அதெல்லாம் கடந்ததுதான் "நம்பிக்கை" நாம வைக்க வேணும் நம்பிக்கை அது நம்ம வாழ்விலேதான் இருக்கிறது. நாம் வாழும் வாழ்க்கையில் வைக்க வேணும். அது எப்படியங்க..?
நாளைய வாழ்வு யாருக்குத்தெரியும்..? விடியும் பொழுது யாருக்குமே தெரியாது. ஆனால் நாம் நம்பிக்கையோடு தூங்கி எழும்புகிறோம். மறுநாள் எழும்புவோம் என்ற நம்பிக்கையோடு. நாளை அந்த வேலை, இந்த வேலை செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை எமக்குள் யாரும் சொல்லாமலே எமக்குள் ஏற்படுக்கின்ற நம்பிக்கையது.

இதெல்லாம் கடந்து நாம கடவுளிடத்தில வைக்கிறோம் நம்பிக்கை. எந்த மதமாகயிருந்தாலும் அந்தந்த சீசனுக்கு அவரவர் தெய்வங்களுக்கு எப்படியெல்லாமோ தம்மை அன்போடு வருத்தி நோன்புயிருந்து ஏதோ ஒரு வகையில தனக்கு நல்லது நடக்கவேணும், தன் குடும்பத்திற்கு நல்லது நடக்கவேணும் என்றெல்லாம் மனுசன் நம்பிக்கை வைக்கிறான்.

அதுவும், மற்றவரையும், தன்னையும் பாதிக்காதவகையில அதுவும் நல்லதுதான். இதற்கு உதாரணமாக ஒரு கதை. என்னோட அநுபவமில்லையப்பா. எங்கையோ எப்போதோ படிச்ச அநுபவம். யாவரும் அறிந்த கதையும் கூட.

பெரிய சபையின் நடுவே பாஞ்சாலியின் சேலையை அப்படியே துச்சாதணன் துகிலுரிகிறார். அப்போது பஞ்சாலி ஐயோ, ஐயோ என்னைக் காப்பாற்றுங்கள் என்று கத்தி கதறுகிறாள். அங்க பாருங்க ஆயிரக்கணக்கானவர்கள், அதில மேதாவிகள், அரசர்கள், பஞ்சாலியின் கணவர்மார்கள் எல்லோரும் இருக்க ஒரு பெண்ணுக்கு சேலை உரியும் போது எவ்வளவு அவமானம். அந்த நேரத்தில ஏன் உடனே கண்ணன் உதவி புரியவில்லை. பஞ்சாலி பேர் சொல்லி கூப்பிடும் வரையில ஏன் அட்டேன்ஷனில இருந்தார்..? யோசிச்சுப்பாருங்க..

ஏன் என்றால் அப்போது பஞ்சாலி தன் மானத்தை இருகைகளாலும் பொத்திக் கொண்டு இருந்து கத்தியிருக்கிறாள்.( நான் பார்த்தனாக்கும் என்று கேட்டுவிடாதீர்கள்..) கண்ணன் என்ன நினைச்சிருக்கிறார். அட அவளுக்கு நம்பிக்கையிருக்கு..தன் மானத்தை தான் காப்பாற்றுவேன் என்று.....அதனால அவரும் பார்வையாளர்களோடு இருந்துவிட்டார். அப்புறமா பாருங்க பாஞ்சாலி கண்ணா கண்ணா என இரண்டு கைகளையும் மேலே தூக்கி கத்தியிருக்கிறாள். அது எதனால கண்ணன் மேலயிருந்த நம்பிக்கையினால. தன்னையும் மறந்து ஆண்டவனிடத்தில முழு நம்பிக்கை வைக்க....( இப்பவுள்ள படத்தில, ஹீரோயினி ஊட்டியிலயிருந்து கண்ணா, கண்ணா என்று கத்தினால் ஹீரோ மதுரையிலிருந்து பல்ட்டி அடிச்சே ஒரு செக்கனில வந்திடுவார்.. )

ம்.....ரொம்ப ஸ்பீடா அந்தச் சேலை அவள் மானத்தைக் காக்க இப்பவுள்ள நாக்க மூக்க பாடல் ஸ்பீடுபோல குசேலன் சேலை, ரம்பா சேலை, பவனா சில்க் சேலை இப்படியாக தொடரா கலர் கலரா வந்திச்சு. (நிஜவாழ்க்கையில இப்படி நடக்குமாங்க..??? ம்ஹும் ச்சான்சேயில்ல.. )(துச்சாதணன் எதற்கு இப்படி திரெளபதியை ஆயிரக்கணக்கானோர் மத்தியில இப்படிக் கேவலப்படுத்தினார் என்றதிற்குக் கூட கதையிருக்கு. அதை இதற்குள் ஜொயின்ட் பண்ணினால் அப்புறம் நம்பிக்கை சப்ஜெக்ட் மாறிப்போயிடுமுங்க. அதனால அதை வேறு ஒரு பொழுது பார்த்துக்கொள்வோம்.)

பாருங்க நாம முழு மனதோடு நம்பவேணும். நம்பிக்கைவேணும். நிச்சயம் அது பிரதிபலிக்கும். நாம சாதிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பதிலும் பார்க்க செயலாற்றிக்கொண்டுடிருந்தால் அதில் நாம வைக்கும் முழு நம்பிக்கை வீண்போகாது.. எல்லாமே ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலதான் வாழுறோம். நாளைய நாளே நம்பிக்கையில்தானுங்க...

அப்புறம் இந்த நம்பிக்கைக்கு இன்னொரு உதாரணம்.

யாருக்காவது போர் அடிச்சா தயவு செய்து எடுத்துச் சொல்லுங்க....என்னை நானே மாற்றியமைச்சு எழுத முயற்சி செய்வேனுங்க..ம்.....கதைக்கு வருகிறேன்..

நடு ரோட்டில ஒரு பெரிய அக்ஸிடென்ட்...அந்த பஸ்சில வந்தவங்க பாதிக்கு மேற்பட்டவங்க இறந்திட்டாங்க....அங்க வந்த உதவிப்பிரிவினர் அரைகுறையாகயிருந்த உயிரோடிருந்தவங்கள மட்டும் தூக்கி ஆம்புலன்சில ஏற்றி அது வெளிக்கிட்டுப் போக ஆயத்தம். அப்ப பார்த்து ஒரு மனுசனை இவங்க இறந்திட்டாரு என்று விட்டிட்டுப் போன அவரு எழும்பி நின்று தன் சேர்டைக் கழற்றி தலையில கட்டுப்போட்டு கத்தியிருக்கிறாரு......( படக்கதையில்லங்க.நிஜக்கதை) உடனே அவரு காப்பாற்றப்பட்டார்...அவருக்குள்ள நம்பிக்கை தன்உயிரையே காப்பாற்றவைத்தது. இதுபோல 2 கைகளையும் இழந்த பெண், கால்களை இழந்தவங்க, இன்னும் நிறையப்பேர் யூனீயரிலிருந்து சீனியர் வரைக்கும் இப்படிப் பல பேர்களுடைய வாழ்க்கை எனும் சக்கரம் சுழன்று கொண்டிருப்பதே தளராத "நம்பிக்கை" யின் அடிப்படையில் தானுங்க..

ஆகவே நம்புங்க...வாழ்க்கையில துன்பம் வரும்போது ஏற்றுக்கொள்ளுங்க...அது கூட அநுபவத்திற்கு ஒரு பாடம்..இன்பம் வரும்போது மகிழ்ந்திருங்க...அடச்சே என்னடா வாழ்க்கை என்று எண்ணாதீங்க...நம்பிக்கையோடு வாழுங்க...வளமான வாழ்வு உங்கள் அருகில்தானுங்க.

அதுவரை டாட்டா
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=9514

நல்ல நண்பர்கள்

நீண்ட மாத இடைவெளியின் பின்பு பாட்டி உங்களை "நண்பர்கள்" என்ற தலைப்பில் சந்திக்க வந்துள்ளேன்..

நண்பர்கள் என்றதை நாங்க ஒரு "நல்ல" என்ற சொல்லை முன்னுக்கு கொடுத்து "நல்ல நண்பர்கள்" என்ற சொல்லை எடுப்போம்..நண்பர்கள் என்றால் எல்லோரும் நண்பர்களில்லை. நண்பர்களில் பல ரகம் உண்டு..கூட இருந்து குழி தோண்டி புதைப்பவனும் இருக்கிறான். தான் கெட்டது காணாம தன் நண்பனையும் கெடுத்து வாழ்பவனும் இருக்கிறான். தான் நொந்தாலும் பரவாயில்ல தன் நண்பனை உயரத்தில வைத்துப் பார்ப்பவனுமிருக்கிறான். இதில "ன்" சேர்த்து எழுதினாலும் ஆண்பால், பெண்பால் இருவருக்குமே பொதுவாகவே எழுதுகிறேன்..

நம்ம அன்பான ஆண்உறவுகள் பாட்டியோடு சண்டைக்கு வரக்கூடாது என்ற நல்ல எண்ணம் தாங்க...

நல்ல நண்பர்கள் வேணும். கட்டாயம் ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல நண்பன் வேண்டும். உண்மையான நண்பன் உயிரையும் கொடுப்பான் என்று சொல்லக்கேள்விப்பட்டிருப்போம். ஆம் அது உண்மை. என்னிடம் அதற்கான ஒன்றல்ல இரண்டல்ல நிறையவே உதாரணங்கள் இருக்கின்றன.. ..எல்லாம் எழுத முடியாது. இதோ ஒரு உதாரணம்..மட்டும்.


என்னோடு முதலாம் வகுப்பு முதல் படித்த தோழி இன்றும் இலங்கையிலிருந்து கடிதம் போட்டுக்கொண்டு இருக்கின்றார். அட இது என்னது இதை வைத்துக்கொண்டு எப்படிச் சொல்லுவது நல்ல நண்பி என்று யாரும் நினைத்துவிடலாம்.

ஆகையினால் ஒரு சின்னச் சம்பவம். ஒரு முறை இங்கிருந்து தாய்நாட்டிற்குச்சென்று பின்பு எனது ஊரான திருமலையிலிருந்து மீண்டும் கொழும்பு செல்ல வேண்டும்....2 நாள் கழித்து கனடா வருவதற்கு பிளைட். அதிகாலை 4.30 மணிக்கு வான் வந்து வெளிக்கிடும் போது நாட்டில பிரச்சனை.இது ஒன்றும் புதுமையானதல்ல......ஆனால் போகிற வழிமுழுக்க சோதனை என்று இறக்கி ஏற்றுவார்கள்...சந்தேகமிருப்பின் விசாரணை என்று இறக்கி வைத்துவிடுவார்கள். அன்று சுதந்திர தினம் வேறு..டென்ஷனில இருப்பார்கள் ஆமிக்காரர்கள். எனக்கோ சிங்களம் என்ற பாஷை ஆஹா, ஓஹோ என்றளவிற்குத் தெரியவே தெரியாது.....டிறைவருக்குத் தெரியும் இருந்தாலும், காலங்கள் கஷ்டங்கள் சொல்லிக்கொண்டு வருவதில்லை....முதல் நாள் இரவு முழுக்க என் தோழி என்கூடவே வீட்டில தங்கினார். அவ ஒரு கன்னியாஸ்திரி. கிறிஸ்தவ மதங்களை போதிப்பவர். ஆண்டவருக்கே தம் உயிர் என அர்ப்பணித்து வாழும் பெண்.

அன்று அதிகாலை தானாகச் சொன்னார் கொழும்பில குண்டு வெடித்து பல சேதங்கள். இதனால் இன்று நீங்க பயணம் வைப்பது நல்லதல்ல......இருந்தாலும் போய்த்தான் தீரவேண்டும்.......நானும் வருகிறேன் உங்களோடு....என்று.

எனது ஐயாவிற்கும் என் சகோதரிகளுக்கும் அப்பாடா கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தமாதிரி.ஏன் என்றால் இப்படியானவர்கள் கூட வந்தால் கொஞ்சம் சேவ்ட்டி. ஆனால் எனக்கோ கொஞ்சமும் விருப்பமில்லை. எங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல என் தோழிக்கு ஏதும் ஆகிற்றென்றால் பாவம் அவர்கள் குடும்பம் இவரை நம்பி பிழைக்கும் குடும்பம். தகப்பனும் இல்லை. ம்.....இப்படியான கட்டத்தில் தன் உயிருக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல நானும் கூட வாறேன்....4 வது நாள் திரும்ப வருகிற வான் தானே..என்று எதுவுமே எடுக்கவில்லை. ஒரு போன் போட்டு அவர்கள் தாயிடம் கூறிவிட்டு என்னுடன் கொழும்பு வந்து ஏயாபோட் வரைக்கும் வந்து அது மட்டுமல்ல என் தந்தை இறந்தது கேள்விப்பட்டு என் சகோதரிகளோடு உடன் இருந்து ஆறுதல் சொல்லி அவர்கள் துன்பத்தில் பங்கேற்று , இன்றும் அந்த தூய்மையான உள்ளம், எதையுமே வாய்விட்டு கேட்காத அந்த புனிதமான நட்பு என்ற உறவு தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அவர் யாரிடமும் சொல்ல முடியாத வேதனைகளை கசப்பான உண்மைகளை எனக்கு மட்டுமே சொல்லி ஆறுதலடையும் நட்புள்ளம் கொண்ட தூய்மையான உறவு அவர் மனது.

இதனை நினைக்கும் போதெல்லாம் நானும் கடவுளுக்கு நன்றி சொல்வேன்.....நல்ல நட்பு எனக்கு கிடைத்ததை எண்ணி.

ஒன்று மட்டும் உண்மை.

நல்ல நண்பர்கள் எமக்கு எப்படி கிடைப்பார்கள்...? எப்படி நாம் அதனை இனங்கண்டு கொள்வது.....? யாரை நம்பி எப்படிப் பழகுவது.......? ஆமாம் இதற்கு எல்லாம் விடைஇருக்கிறது.....எப்படி....????

சிந்தித்துப்பாருங்கள்...நாம நல்லபடியாக நடக்கவேணும். எம்மில்தான் தங்கியுள்ளது. நாங்கள் நல்லபடியாக நல்ல நண்பர்களாக பழகிக்கொண்டால் நிச்சயம் எங்களுக்கு நல்ல நண்பர் கிடைத்துவிடுவார்.

நான் சரியாகத்தான் நடந்தேன்.அவன்தான் எனக்குத் துரோகம் செய்து விட்டான் என்றும் வரும்..அதற்கும் எடுத்தவுடன் நாம் எல்லோரையும் நண்பராக்கிக்கொள்கிறோம். ஆனால் எடுத்தவுடன் எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லிவிடமாட்டோம். அதுபோலத்தான் நாம் நல்ல நண்பரோடு பழகினால் அவருடைய எண்ணம் நீங்களாவீர்கள், நாமாவோம். அப்போது புரிந்து கொள்வோம் நம் நல்ல நண்பரை.

கணவனிடத்தில் சொல்லாத கதைகள், மனைவியிடத்தில் சொல்லாத கதைகள் எத்தனையோ விசயங்கள் அத்தனையும் நம்பி ஒரு நண்பனிடத்தில் சொல்லுகிறோம். ஏன்.அதுதான் நண்பன்.

பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களை ரகசியமாக சொல்லிய காலமுண்டு. இப்பொழுது எல்லாம் அப்படியான காலமில்லை. ஆகவே நண்பர்கள் யாராகயிருந்தாலும், பெண்களே உங்கள் ஆண் நம்பரை உங்கள் கணவருக்கு அறிமுகம் செய்யுங்கள். அதுபோல ஆண்களே உங்கள் பெண் நண்பரை உங்கள் மனைவிக்கு அறிமுகம் செய்யுங்கள்.

குட்டிக்கதை....என் கணவர் சொன்னார் தான் கொண்டு போன சாப்பாட்டில் தன் நண்பிக்கும் கொடுத்ததாக (ஏதோ ஒரு நாட்டுக்காரப்பெண்....மறந்துவிட்டேன்...நான்) ஏன் என்றால் அவர் ஹொஸ்பிட்டல் போய் நேராக வேலைக்கு வந்தபடியால உணவு கொண்டுவரவில்லை என்று. நான் சொன்னேன் அதனால் என்ன இனி கொஞ்சம் அதிகமாக சாப்பாடு கொண்டு போங்கோ என்று ஜோக்காக சொல்லி விட்டு நான் கேட்டேன்....உங்களைப்போல நானும் ஒரு ஆண்நண்பருக்கு சாப்பாடு கொடுத்தால் என்ன சொல்லுவீங்க என்று.....

அதற்குச் சொன்னார் அதுதான் நண்பருக்கு என்று சொல்லிவிட்டீங்களே பிறகு இதில நான் சொல்லுறதிற்கு என்னயிருக்கு என்று....

பெருமைக்காக சொல்லவில்லை. இந்தச்சம்பவம் நடந்தபிறகே இதனை எழுதவேண்டும் என்று நினைத்து இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நல்ல மனதோடு நல்ல நண்பரை தேர்ந்தெடுங்க, காசு , பதவி, வசதி இருந்தால்தான் உறவுகள் கூடி, தேடி வருவாங்க......ஆனால் நல்ல நண்பன் எதையுமே எதிர்பார்க்கமாட்டான். அவன் கஸ்டப்படுவான் உங்களிடம் எதிர்பார்க்கமாட்டான். நீங்களாக உணர்ந்து உதவி செய்ய வேண்டும்.
அதையும் எதிர்பார்க்கமாட்டான்.


வாழுங்க நல்ல நண்பர்களோடு நலமாக.

ஆமாங்க ஒரு முக்கியமான விசயம் சொல்லமறந்துட்டேங்க.....மேலே ஒரு வார்த்தை எழுதினேன்....(பெண்களே உங்கள் ஆண் நண்பரை உங்கள் கணவருக்கு அறிமுகம் செய்யுங்கள். அதுபோல ஆண்களே உங்கள் பெண் நண்பரை உங்கள் மனைவிக்கு அறிமுகம் செய்யுங்கள். )

ஆமா இதுதான் இந்த அறிமுகத்தில எந்த வீட்டிலையாவது அகப்பைகாம்பு பதிலாக எதிரொலிக்குமாகயிருந்தால் பாட்டி பொறுப்பல்ல.... .பாட்டி எஸ்கேப்...

டாட்டா..

மீண்டும் ஏதாவது கிளிக்கான உங்களோடு....சந்திக்கிறேன்..
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே..
நிலாவில் உலாவரும் தனிமதி

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=9453

Friday, December 19, 2008

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும்.....

இன்று உங்களிடம் " வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும் " என்ற வாக்கியத்தின் உண்மையை தெரிந்தளவிற்கு, அறிந்தளவிற்கு எடுத்துரைக்கலாம் என்று எண்ணியிருக்கிறேன்.

மானிடப்பிறவி எடுப்பதற்கே மாதவம் செய்திடவேண்டும்...அதிலும் பாருங்க..மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஒரேயொரு அறிவுதான் வித்தியாசம். அதிலும் இரு இனங்களையும் பிரித்துக்காட்டவேண்டுமானால் ஒரு சின்ன உதாரணம்.....மனிதர்கள் வாய்விட்டுச் சிரிக்கத்ததெரிந்தவர்கள்.


மிருகங்கள் அப்படியில்லை. யாரும் சிங்கம் சிரித்தது கண்டிருக்கிறேன், பூனையும் சிரித்தது கண்டிருக்கிறேன் என்றால் சந்தோசப்படுவேன்... ம்....எழுத வந்த விசயத்திற்கு வருகிறேன்....

நாம வாழ்க்கையில எத்தனையோ துன்பங்கள், இன்பங்கள் என்று அநுபவிச்சுக்கொண்டு வருகிறோம்...இதிலும் பார்த்தீர்களென்றால் எம்மை வாட்டுவது துன்பம்தான். இன்பம் வரும் போது முகமலர்ச்சிபெறுகின்றோம். எல்லோருடனும் மனச்சந்தோசமாக பேசுகின்றோம், எந்தக்காரியமாக இருந்தாலும் மகிழ்வோடு செய்கின்றோம்.இதற்குக்காரணம் மனமகிழ்ச்சி. இதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு பார்த்தால்...சிரிப்பு எவ்வளவு பெருமதிமிக்கது என்பது விளங்குகிறது..மனிதர்களிலும் எல்லோருக்கும் இந்தமாதிரியான மனமகிழ்வான சிரிப்புவந்து அமையாது.

சிலபேரைப்பார்த்தீர்களென்றால்....அவங்க பேசுவதிலே நகைச்சுவை கலந்து...மற்றவர்களை சிரிக்கப்பண்ணிக்கொண்டே நகைச்சுவையாகப் பேசிக்கொண்டேயிருப்பார்கள். அது அவர்களுக்கு கடவுள் கொடுத்தவரம் எனலாம். சிரிப்பதிலும், அடுத்தவரையும் சிரிக்கச்செய்து மகிழும் காணும் மனிதர்கள் இன்றைய அதிவேகமான உலகில் மிகவும் குறைந்து செல்லுகின்றது.


ஆனாலும் யாருமே கற்றுக்கொடுக்காத அந்த இயல்பான பண்புடையவர்கள் யாரானாலும் வாழ்த்தப்படவேண்டியவர்கள்..அவர்களைச்சுற்றி ஒரு அன்பான கூட்டம்தானாக உருவாகும்...அவர்களோடு தினமும் பேச மனம் ஏங்கும்...எந்தக்கவலையானாலும் அவர்கிளிடத்தில் சொல்லிப்போக்க மனம் அவர்களை நாடும்.சிலபேரைப்பார்த்தால் சிரிக்கவே மாட்டார்கள்.....உம் என்று அடம்பிடித்துக்கொண்டு இருப்பார்கள்....அவர்களும் நல்லவர்களேதான்....ஆனாலும் அவர்கள் முகம் அதனைக்காட்டிக்கொடுத்துவிடும்.

நீங்கள் எப்படியோ அறிந்துகொள்ளுங்கள் உங்களை நீங்களே...... இந்தச்சிரிப்பிலும் பலவிதங்கள் இருக்கின்றன....ஏளனச் சிரிப்பு, நக்கல் சிரிப்பு, நமட்டுச்சிரிப்பு, கொடுப்புக்குள் சிரிப்பு, இன்னும் பற்பல...நமக்கு வேண்டியதெல்லாம் மனமகிழ்வான சிரிப்பு மட்டும்தான்....இப்பொழுது அமேரிக்க டாக்டர்களாலேயே...நிரூபிக்கவிட்டது.....நோய்கள் உடம்பை தாக்காதிருக்க சிரிப்பும் ஒரு பயிற்சியாக மேற்கொண்டுவருவது சிறந்தது என்று..உண்மைதான்.ஒரு சின்னச் சம்பவம்....உங்களுக்கும் சிரிப்பு வந்தால் சந்தோசம்.

ஒரு பிறந்தநாள் விழாவைபவம்....அங்கே மேசைமீதிருந்த கரண்டிகள் என் கணவர் கையில் எடுத்துக்கொண்டார்.எங்கள் மேசையைச்சுற்றியிருந்த கதிரைகளில் இன்னுமொரு அறிந்த நண்பர்கள். குழந்தையோடு.....குழந்தையை நான் வைத்திருந்தேன்....அங்கே ஒலிபரப்பப்பட்ட பாடல் இசைபோதாது என்று கையில் வைத்திருந்த கரண்டிகளால் அந்த மேசையில் தாளம் போட்டார்.

என் கணவர்...குழந்தை சிரித்தது........9 மாதக்குழந்தை.......ரொம்ப நல்லா சிரித்தாள்..... .அதனைப்பார்த்து எல்லோரும் சிரித்தோம்....அதன் பிறகு எதற்கோ என் கணவர் மியூசிக் எழுப்புவதை நிறுத்திவிட்டு அவர்களோட பேச வாய் எடுக்க...அந்தக்குழந்தை அழுதிடிச்சு.......அட ஏன்டா அழுகிறது என்று எனக்கும் புரியவில்லை..குழந்தையின் அம்மா...வாங்கிக்கொண்டாங்க.அப்பவும் குழந்தை அழுகை நின்றபாடில்ல...எல்லாமே கொடுத்துப்பார்த்தோம் அழுகை நிற்கவில்லை.

மீண்டும் என் கைகளில் குழ்நதை....என் கணவர் கரண்டிகளை கையெலடுத்தார்......அட பாருங்க கப்புன்னு அழுகையை நிறுத்திடிச்சு.அப்புறமாத்தான் தெரிஞ்சது இவர் போட்ட மியூசிக்கில குழந்தை ரொம்ப மகிழ்சியடைஞ்சிருக்கு என்று....அப்புறம் என்ன இவர் குழந்தை தூங்கும் வரை ஒரே மியூசிக்தான்....இப்பநினைச்சாலும் சிரிப்பாகத்தானிருக்கு..

இதுபோல எத்தனையோ.குட்டிகுட்டி சந்தோசமான நிகழ்வுகள். சிரித்து மகிழ்பவன் மனசில எந்தக்கவலை வந்தாலும் அதிக காலம் இருந்து வாட்டப்போவதில்லை.. அன்பாகப்பேசுங்க....வாழ்வில் நடந்த சின்னச்சின்ன நகைச்சுவைகளை நினைச்சுப்பாருங்க.எழுதுங்க.........உங்கள் மனது மகிழ்வைப்போல மற்றவங்க மனசுகளையும் மகிழவையுங்க....போனதிற்காக வருத்தப்படாதீங்க...இருப்பதை எண்ணி சந்தோசப்படுங்க.....வாய்விட்டுச்சிரியுங்க.....நிஜமாக நோய்விட்டுப்போகுமுங்க....நல்ல நகைச்சுவைச் சம்பவங்களை உறவுகளோடு பேசிமகிழுங்க....இதயம்கனமாயிருக்காது நின்மதியாகக்கூட இருக்குமுங்க....அதற்காக தேவையில்லாததெற்காலாம் சிரிக்காதீங்க..பார்ப்பவன் பைத்தியக்காரன் என்றுவிடுவானுங்க....நகைச்சுவைப் படங்களைப் பாருங்க....மனம்விட்டு மகிழ்ந்திருங்க......நம்ம நிலாகூட மனங்கள் மகிழ்ச்சியாகயிருக்க நிலா டி.வி....யில நகைச்சுவைப்படங்களை இணைச்சிருக்கிறாரு......அதையும் பாருங்க...வாழ்க்கையை மகிழ்சியுடையதாக மாற்றிப்பாருங்க.....அதுவே நல்ஆரோக்கியமான வாழ்விற்கு சிறந்த வழிபாருங்க...

சரி பிள்ளைகளே மீண்டும் அடுத்த அட்வைசோடு உங்களைச் சந்திக்கமுன்பு எல்லோருக்கும் நல்ல பொழுதாக அமையவேண்டிவிடைபெறுகிறேன்.
உங்கள் அன்பு மதி.

குறள் ஒன்று..

இடுக்கண் வருங்கால் நகுக
அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல். (621)

விளக்கம்:துன்பங்கள் வரும்போது மனம் தளராமல், நகைத்து ஒதுக்குக. துன்பங்களைக் கடப்பதற்கு அதனை விடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.

Tuesday, December 2, 2008

" உடற் பயிற்சி "

சென்ற பொழுதுகளில் "இறப்பு" என்ற சொல்லோடு உங்களைச்சந்தித்தேன்....
இன்று உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமாகத் தேவைப்படும் பயிற்சி என்ன என்றதை விளக்குமுகமாக " உடற் பயிற்சி " என்ற சொல்லை தேர்ந்தெடுத்து கூற வந்துள்ளேன்..

நாம் ஆரோக்கியமாக வாழ உணவு மட்டும் முக்கியமானதல்ல...நமது உடலில் தேங்கியிருக்கும், தேவையற்றவற்றை கரைப்பதானால் உடற்பயிற்சி மிகவும் அவசியமானது. நான் தினமும் வேலை செய்கிறேனே....எனக்கு எதற்கு......? என்று கூறுவோருமுண்டு. நாம் இதைச்செய்வதால் என்ன பலன் என்று அலட்டிக்கொள்வோருமுண்டு...எல்லாவற்றிக்கும் காரணம் நமது மனம்தான். உடற்பயிற்சி செய்வதால் பல நன்மைகள் நமக்கு ஏற்படுகின்றது.

துரித இரத்த ஓட்டம், மூளை இயக்க வேகம் அதிகரித்தல், தசைகளின் இறுக்க நிலை, தேவையற்ற கொழுப்புச்சத்து கரைதல், தன்னநம்பிக்கை வளர்தல், பொலிவான தோற்றம், அதிகமான எடை குறைதல், தேவையற்ற கழிவுப்பொருட்கள் வெளியேறுதல், சோம்பல் இல்லாமை, வயது போனபின் வரும் உபாதைகளை தடுத்தல், சீரான சுவாசம் இப்படிப் பல பல நன்மைகளைப் பெறலாம்.உடல் மெலியவென மாத்திரைகளை நாடுவதும், தம்மைத்தானே வருத்துவதும், கவலையில் வாடுவதும் தேவையற்றதொன்றாகும்.

நம்மால் எந்தளவிற்கு உடற்பயிற்சி செய்யமுடியுமோ அதனை மட்டும் செய்ய வேண்டும்...காலையில் வழமையைவிடத் தினமும் அரைமணி நேரத்திற்கு முன்பாக எழுந்து இறுக்கமான உடை அணிந்து, காலுக்கு நல்ல சப்பாத்தும் அணிந்து கொண்டு ஓடுதல் சிறந்த உடற்பயிற்சியாகும்.இதைவிட நீச்சல் தெரிந்திருப்பின் வாரம் ஒரு தடவையாவது நீச்சல் உடற்பயிற்சி செய்வதும் மிகவும் உன்னதமானது. வயது போனவர்கள் ஓட முடியாது விட்டால் வேக நடைகூட மிகவும் பலன் தரும்.


உடற் பயிற்சி நிலையங்களைக்கூட வாரம் 3 முறை என நாடலாம். அல்லது வீட்டிலேயே சாதாரண உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். எல்லாவற்றிக்கும் மேலாக விரும்பிய பாடல்களைப்போட்டுவிட்டு ஆடி மகிழ்வதே சிறந்த உடற்பயிற்சியாகும்.நன்றிகள் பிள்ளைகளே..... இதுவரை எழுதியதே அதிகம். அதனால அனைவருக்கும் நல்லபொழுதாக அமையவேண்டி பாட்டி அடுத்த அட்வைசுடன் சந்திக்கிறேன்...



எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல். (489)

விளக்கம்:
கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்தபோது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றிபெற வேண்டும்.

***************************************************
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி.

Friday, November 28, 2008

" இறப்பு "

நலமாக இருக்கிறீர்கள் தானே உறவுகளே...

நீண்ட நாட்களுக்குப்பின்பு உங்களோடு பாட்டியின் அறிவுரை. சென்ற முறை " ஏமாற்றுதல் " பற்றி எழுதியிருந்தேன். இம்முறை நாம் வாழ்வில் சந்திக்கும் " இறப்பு " பற்றி கலந்தாலோசிக்கலாம் என்று வந்துள்ளேன்.

வாழ்க்கையில நாம எதைவேண்டுமென்றாலும் இழக்கத்தயாராகயிருக்கிறோம். பணம், பொருள், உடமை இப்படியான உயிரற்ற எதைவேண்டுமென்றாலும்..ஆனா மனித வாழ்வில் ஒரு உயிரை இழக்கப்போகிறோம் என்று தெரிந்தால் அதனை ஏற்கக்கூடிய மனப்பக்குவத்தை ஆண்டவன் யாருக்கும் கொடுக்கல்ல. அந்த இழப்புக்குப்பின்னால ஒவ்வொரு உயிர்களும், உறவுகளும் அழுது..அழுது இன்னும் நினைக்கும் போதெல்லாம் கண்களை கசக்கிக்கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கிறாங்க என்பது உண்மை.

இப்படியாக ஒரு இறப்பிற்குப்பின்னால இருப்பவர்கள் அவரை நினைத்து அழுந்துகொண்டேயிருந்தால் அந்த ஆத்மா சாந்தியடையுமா...? இவர்கள் அழுவதை அந்த ஆத்மா விரும்புமா..? இல்லை.ஒருபோதும் அநுமதிக்காது என்று முன்னைய ஏடுகள் எடுத்துச்சொல்லுகின்றன.

அதனால நாம நம் கடமைகள் முடிந்த பிற்பாடு....இறந்தவர் நமக்குக் காட்டிய உயர் பண்புகள், நல் பழக்கவழக்கங்கள், மற்றவர்களை அநுசரித்துப்போகும் நல் பழக்கவழக்கங்கள், நல்வழிகாட்டிகள் யாவையும் நல் வழியில் பின்பற்றி....வாழ்ந்தார் அவரைப்போல பேர் சொல்லும் பிள்ளையாக வாழ்கிறார்கள் என்று மற்றவர்கள் பார்த்து புகழ்ந்து போற்றும் அளவிற்கு நல்மனிதர்களாக நாமும் வாழவேண்டும்.

இருக்கும் போது முடிந்தளவு, எம் அன்பால் அவர்களை திருப்திப்படுத்தி சந்தோசமாக வைத்திருக்கவேண்டும். இதனை எழுதும் போது ஒரு கற்பனைக்குட்டிக்தை ...

ஒரு வயசான அப்பா, அம்மா...பிள்ளைகளோ வெளிநாட்டு வாழ்க்கை பெரும் பிஸியான வாழ்க்கை. யாருமற்ற அவர்கள் சந்தோசம் காணவேண்டி வயோதிபர் மடத்தில தஞ்சம். அப்பாடா ஒருவாறு சேவ்ட்டி பிளேஸ் என்று பிள்ளைகள் நினைக்க விதி அவர்களில் ஒருவருக்கு( தந்தை) விபரீதம்....இறந்துவிட்டார். இருக்கும் அடுத்தது பெற்றதாய். இனியாவது தன் பிள்ளைகள் தன்மீது அக்கறை கொள்ளுவார்கள் என்று நினைத்து நினைத்து ஏமாற்றம்........நாளடைவில் அம்மையும் சிவபாதமடைந்துவிட்டார்.

பெருவிழாக்கோலம் போட்டு மண்டப ஒழுங்கமைத்து பத்து வயதில் நடந்த சம்பாஷனைகள் அட்டைபுத்தமாகி.....பாருங்கள்.....இது அவசியமா...? இங்கு நான் யாரையும் குறிப்பிடவில்லை. இதுதான் இன்றைய நிஜம்.

அதனால நாம நமது உறவுகளோடும் சரி....ஏனையவர்களோடும் சரி அன்பாகப்பேசி, அவர்களை நேசித்து இருக்கும் போதே நல்ல சந்தோசமாக வாழ்வோம்.

என்ன பிள்ளைகளே அப்ப நான் போயிட்டு வாறன்....

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு.
(75)
விளக்கம்:
இவ்வுலகத்தில் இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு, அவர் அன்புடையவராய் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர்.
************************************************************************************

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும்
தனிமதி.

Friday, November 14, 2008

"ஏமாற்றுதல்"

சரி....யாருக்கும் எந்தக்குறையும் ஏற்படாதவாறு இன்று " ஏமாற்றுதல்" பற்றி என் அறிவிற்குத் தெரிந்த அறிந்த விடயங்களைப்பற்றி எழுதுறேன் பாருங்க.

இந்த உலகமே ஒரு ஏமாற்றுவிதம்தான். கள்ளம் கபடமில்லாத குழந்தைக்குக்கூட தாய் நிலாவைக்காட்டி, ஏமாற்றிச் சோறு ஊட்டுவாள். நித்திரைக்குப்போனால் அங்கேயும், பொக்காண்டி வா...வா...பிள்ளை நித்திரை கொள்ளேல்ல வந்து புடிச்சுக்கொண்டு போ.போ.

ம்.....ஆச்சா...
அப்புறம் பாடசாலையில ஆசிரியரை ஏமாற்றுவது. ஆனா இதுவெல்லாம் யாரையும் பெரிசா பாதிக்காது. அது அவனோடையே போயிடும். ஆனா மனுசனாகிட்டா சில ஜென்மங்கள் செய்கிற வேலையிருக்கே இதுகளும் வாழவேண்டுமா என்றிருக்கும்.

இப்படியே வளர்ந்து ஒன்று நன்மை அடையவேணும் என்பதற்காக இன்னொன்று ஏமாற்றிவாழுவது. இது அன்றுதொட்டு காணுகிறோம். சரி....அதையாவது பொறுத்துக்கொள்வோம். ஆனா பாருங்க..

மனிதன் என்று 2 கையும், 2 காலும், முழுசான உருப்படியா பிறந்தும் அழுக்கான மனசா வாழுறாங்களே சிலபேர்கள்.....அவங்க செய்கிற ஏமாற்றுத்தனமிருக்கே மன்னிக்கமுடியாதது. நிச்சயமாகச் சொல்லுவேன். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் ஏதோ ஒரு வகையில அவன் அநுபவிச்சிருப்பான் அந்த ஏமாற்றத்தை.

அது காதலாக இருக்கட்டும், ஏன் அப்படி.? இப்படிச் சொல்வோம், பொன், பொருள், பெண், ஆண் இதில எதுவானாலும் அவன் பாதிக்கப்பட்டிருப்பான். இந்த ஏமாற்றம் தனிய ஏமாற்றம் இல்லை. இதற்கு இன்னுமொரு பெயரும் உண்டு. அதுதான் " நம்பிக்கைத்துரோகி"

இவற்றை எவ்வாறு இனங்காணுவது..? முடியாது முடியவேமுடியாது. நமக்கு அநுபவம் என்று ஒன்று வந்தால் மாத்திரம் காணலாம். அடுத்ததடவை உசாராகயிருக்கலாம். தலைமுட்டிய பின்புதான் புரியும், பதிவான நிலையின் கட்டிடம். அடுத்ததடவை...நாம பார்த்துப்போயிடமாட்டோமா என்ன..?

ஒரு உண்மைச்சம்பவம்

ஊரில ஒரு சாப்பாட்டுக்டை ( ஹொட்டல்) வைத்திருக்கும் முதலாளி அவர். காலையில கடைதிறந்து அப்பனே முருகா, அல்லாஹ், அந்தோணியாரே என்று சகலரையும் பெரிசா மாட்டி ஆகவேண்டியவகைளைச் செய்து, தடித்த ஒற்றை திருநீறுடன் நடுவில ஒரு குங்குமமு்ம் சந்தனமும் கலந்த நச்சுன்னு ஒரு பொட்டு.

ஊரில செல்வாக்குதான். ஆமியென்ன, போலீஸ் என்ன? அனைவரும் அவருடைய சொல்லுக்கு அலுவல்நடக்கும். ( லஞ்சம் கொடுத்தாதானப்பா.. )
அதே ஊரில இந்த ஓனருக்கு ஒரு சொந்தம் மாமா என்று அழைக்கப்படும் அவருக்கு, காணிப்பிரச்சனை. இக்கட்டான சூழ்நிலை. இன்ஸ்பெக்டருடன் பேசவேணும். அயலவர்களால வாய்த்தர்க்கம் வேறு பிரச்சனை. நம்மாளு ஓனர் இதுக்கெல்லாம் தலையைக் காட்டமாட்டார். ஆனாலும் மாமா விடுவதாகவில்லை. ஒரே பிடியாய் ஒனரை பிடித்துக்கொண்டார். சரி நாளைக்கு 2 பெரும் போய் இன்ஸ்பெக்டரை சந்திப்போம் என்று சொல்லிவிட்டார். மாமாவும், காலை 7 மணி தொடக்ம் 1 மணி வரை பார்த்தார். ஓனர் வரவேயில்ல. மாமாவிடம் ஒரு டப்பான் சயிக்கிள் வேறு அதையும் உதைஞ்சு உதைஞ்சு கடைக்குப்போய்ப்போய் ஏமாற்மாக வந்தார். கல்லாபெட்டி ( காசுவேண்டும் இடம்) அருகில் அவரிடத்தில் வேறு ஒருவர். ஐயா இன்னும் வரல்லை ஐயா. இதுதான் பதில்.( கல்லாபெட்டிக்கு எதிராக டீ போட்டுக்கொடுக்கும் இடம். எல்லாமேகடை வாசல் அருகில்தான்.)

மாமாவிற்கு வஞ்சகமில்லாத மனசு. அட என்னதான் இவனுக்கு நடந்தது என்று மனசுக்குள்ள படபடப்பு.

சரி......என்றிருக்க...நம்மப்போல ஒன்று மாமாவிற்கு பிரையின்வோஷ் பண்ணிச்சு. மாமா அதுபோலவே வழமையாகப்போகும் நேரான பாதையில செல்லாம அடுத்த ரோட்டால சுற்றி வர நேரே கல்லாப்பிட்டியில ஹி.......என்ற படி ஓனர். அட மாமாவா வாங்க! வாங்க! பாலு.மாமாவிற்கு சூடா ஒரு கப் பால். என்றபடி..

சரி....அதற்கு பிறகு உங்களுக்குப் புரிந்திருக்கும். இதில பாருங்க.ஓனருக்கு டிப்ஸ் கொடுப்பது அந்த டீ ஆத்தும் பாலுதான்..மாமாவின் சயிக்கிள் நேர வர அவர் அங்க வாறார் மாமா என்று சொல்ல....இவர் ஓனர் கதிரைக்கு கீழே தலையை மட்டுமல்ல உடம்பையும் வளைச்சு திணிக்க...அந்த இடத்தில வேறு ஒருவர் பதில் சொல்ல.......பிறகு மாமா போக ஓனர் தலையை நிமிர்த்த இப்படியே 4, 5 தரம் நடந்துவிட்டது. மாமா எதிராகப்போனபோது அவரால எதுவும் செய்யமுடியவில்ல...வசமா மாட்டு.

பாருங்க...இப்படியெல்லாம் தேவையா..? நாம யாரையும் ஏமாற்றிப் பிழைக்கும் மட்டும், நாமக்கு நாமே சாவுக்குழி தோண்றுவது போலாகும்.
திருமணம் முடித்த ஆணோ, பெண்ணோ தங்களை மணமுடியாதவர்களாக ஏமாற்றுவது, எதுக்கெடுத்தாலும் பொய்பேசி அடுத்தவர்களை ஏமாற்றி தன்வலையில விழவைப்பது. இது நாட்டிற்கு நாடும் தொடர் சங்கிலியாக வளர்ந்து கொண்டுவருகின்ற கொடிய வைரஸ்.

முடிந்தவரையில அடுத்தவரைப் ஏமாற்றிப் பிழைப்பு நடத்துவதை விடுத்து....
அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் ஏமாற்றுங்கள். ( அதாவது ஒரு லீவு எடுக்கவேணும் பொய்யான தகவல் கொடுத்தால்தான் தருவார்கள் என்றிருந்தால்...இப்படியான சொந்தத்தேவைகள்..)
அடுத்தவரை ஏமாற்றாமல் முடிந்தவரையில் உண்மைபேசி வாழ்வோமாக.


" சிலபேரை சிலகாலம் ஏமாற்றலாம்"

"பலபேரை பல காலம் ஏமாற்றலாம்"

" எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்றமுடியாது."


விடிகின்ற பொழுது எல்லோருக்கும் நல்ல பொழுதாக அமையட்டும். என்று கூறி அனைவருக்கும் டாட்டா...



--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

www.nilafm.com

Wednesday, November 12, 2008

" கடன் "

பிள்ளைகள் எல்லோரும் நலம் தானே...

பாட்டியும் நல்ல சுகம். சென்ற முறை உங்களுக்கு " மனஅழுத்தம்" பற்றி அழுத்தி அழுத்தி சொன்னனான் தானே. இந்த முறை " கடன் " பற்றி எடுத்துவிடலாம் என்று இருக்கிறேன்.

அப்பப்பா பொல்லாத சொல்லப்பா இது. வேண்டியவனும் நின்மதியாய் இருந்ததில்லை, கொடுத்தவனும் நின்மதியாய் இருந்ததில்லை. அப்ப என்னதான் செய்யலாம், வேண்டாமல் விடுவதா??? அல்லது கடன் கேட்டாலும், உயிர் போனாலும் கொடுக்காமலே விடுவதா..???

இல்ல அப்படியான எண்ணம் யாருக்கும் வரக்கூடாது. மற்றவர்களின் அவசரதேவைக்கு எங்களிடம் இருப்பதை கடனாக கொடுப்பதால் அதை பெற்றுக் கொண்டவன்மட்டுமன்றி அதனால பிரையோசனப்பட்டவர்களும் உங்களை, எங்களை வாழ்த்துவார்கள். ஆனால் யாரை நம்புவது பணத்தை
வேண்டிக்கொண்டு எஸ்கேப்பானால் என்ன செய்வது..? என்று நாங்கள் யோசிக்கதான் வேண்டும்.


இதுவரையில் யாருக்காச்சும் கேட்டவரம் அத்தனையும் தெய்வம் கொடுத்திருக்கா..? இல்லைத்தானே..அதுபோலத்தான் இதுவும் நாம நம்பிக்கை வைக்கிறோம் கொடுக்கிறோம். அந்தக் கடன் திரும்ப நமக்கு கிடைத்தால் கண்டு கொள்ளவேண்டியதுதான். அப்படி கிடைக்காவிட்டால்....நன்னா அவங்களை சபிச்சுட்டு இருக்கவேண்டியது தான்.

ஆனா ஒரு விசயம்...கடன் வேண்டினவங்கதான் இதில மனிதநேயத்துடன் நடக்கவேண்டும். தங்கள் தேவைக்கு இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி காரியத்தை பெறுவார்கள், அதன் பின்பு சண்டைக்கு நிற்பார்கள். வேண்டினான்தான்....இப்ப அதற்கு என்ன வசதிவரும் போது தரலாம் என்பார்கள். ( எல்லோரும் அப்படியில்ல பாருங்கோ.)

நாம சாப்பிடும் பழத்தை சாப்பிட்டு அறிந்து கொள்ளலாம், புளிப்பா, இனிப்பா, கசப்பா என்று.ஆனா......பாருங்கோ...இப்படியான யோக்கியன் மாதிரி நடக்கும் அயோக்கியவன்களை பழகினாலும் அறியமுடியாது. பொதுவா மனிதரை அறியவே முடியாது..

இப்ப நான் என்ன சொல்ல வாறன் என்றால்.......கடன் வாங்குவதில் இருக்கிற பக்குவம், நேர்மை, விசுவாசமான பேச்சு, எல்லாம் திருப்பி கொடுக்க வேண்டும் என்றதிலும் இருக்கவேண்டும். அப்படித்தவறின் உரியவர்களிடம் உங்கள் கஷ்ட நிலமைகளைச்சொல்லி தவணை கேட்கவேண்டும். இதுவே மனிதநேர்மை.

என்ன பிள்ளைகளே உங்களில் யாருக்காச்சும் இந்த கொடுக்கல் வாங்கல், பிச்சல் புடுங்கல் அநுபவம் இருக்கோ...
அப்ப சரி பிள்ளைகள் நானும் போயிட்டு வாறட்டோ...கனக்க எழுதிப்போட்டன் போலயிருக்கு..

இருக்கிற பொழுது எல்லோருக்கும் நல்லதாக அமையட்டும்.

டாட்டா



நிலம் பார்த்து நாற்று நடு
நல்ல மனம் பார்த்து கடன் கொடு.


--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி