Friday, November 28, 2008

" இறப்பு "

நலமாக இருக்கிறீர்கள் தானே உறவுகளே...

நீண்ட நாட்களுக்குப்பின்பு உங்களோடு பாட்டியின் அறிவுரை. சென்ற முறை " ஏமாற்றுதல் " பற்றி எழுதியிருந்தேன். இம்முறை நாம் வாழ்வில் சந்திக்கும் " இறப்பு " பற்றி கலந்தாலோசிக்கலாம் என்று வந்துள்ளேன்.

வாழ்க்கையில நாம எதைவேண்டுமென்றாலும் இழக்கத்தயாராகயிருக்கிறோம். பணம், பொருள், உடமை இப்படியான உயிரற்ற எதைவேண்டுமென்றாலும்..ஆனா மனித வாழ்வில் ஒரு உயிரை இழக்கப்போகிறோம் என்று தெரிந்தால் அதனை ஏற்கக்கூடிய மனப்பக்குவத்தை ஆண்டவன் யாருக்கும் கொடுக்கல்ல. அந்த இழப்புக்குப்பின்னால ஒவ்வொரு உயிர்களும், உறவுகளும் அழுது..அழுது இன்னும் நினைக்கும் போதெல்லாம் கண்களை கசக்கிக்கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கிறாங்க என்பது உண்மை.

இப்படியாக ஒரு இறப்பிற்குப்பின்னால இருப்பவர்கள் அவரை நினைத்து அழுந்துகொண்டேயிருந்தால் அந்த ஆத்மா சாந்தியடையுமா...? இவர்கள் அழுவதை அந்த ஆத்மா விரும்புமா..? இல்லை.ஒருபோதும் அநுமதிக்காது என்று முன்னைய ஏடுகள் எடுத்துச்சொல்லுகின்றன.

அதனால நாம நம் கடமைகள் முடிந்த பிற்பாடு....இறந்தவர் நமக்குக் காட்டிய உயர் பண்புகள், நல் பழக்கவழக்கங்கள், மற்றவர்களை அநுசரித்துப்போகும் நல் பழக்கவழக்கங்கள், நல்வழிகாட்டிகள் யாவையும் நல் வழியில் பின்பற்றி....வாழ்ந்தார் அவரைப்போல பேர் சொல்லும் பிள்ளையாக வாழ்கிறார்கள் என்று மற்றவர்கள் பார்த்து புகழ்ந்து போற்றும் அளவிற்கு நல்மனிதர்களாக நாமும் வாழவேண்டும்.

இருக்கும் போது முடிந்தளவு, எம் அன்பால் அவர்களை திருப்திப்படுத்தி சந்தோசமாக வைத்திருக்கவேண்டும். இதனை எழுதும் போது ஒரு கற்பனைக்குட்டிக்தை ...

ஒரு வயசான அப்பா, அம்மா...பிள்ளைகளோ வெளிநாட்டு வாழ்க்கை பெரும் பிஸியான வாழ்க்கை. யாருமற்ற அவர்கள் சந்தோசம் காணவேண்டி வயோதிபர் மடத்தில தஞ்சம். அப்பாடா ஒருவாறு சேவ்ட்டி பிளேஸ் என்று பிள்ளைகள் நினைக்க விதி அவர்களில் ஒருவருக்கு( தந்தை) விபரீதம்....இறந்துவிட்டார். இருக்கும் அடுத்தது பெற்றதாய். இனியாவது தன் பிள்ளைகள் தன்மீது அக்கறை கொள்ளுவார்கள் என்று நினைத்து நினைத்து ஏமாற்றம்........நாளடைவில் அம்மையும் சிவபாதமடைந்துவிட்டார்.

பெருவிழாக்கோலம் போட்டு மண்டப ஒழுங்கமைத்து பத்து வயதில் நடந்த சம்பாஷனைகள் அட்டைபுத்தமாகி.....பாருங்கள்.....இது அவசியமா...? இங்கு நான் யாரையும் குறிப்பிடவில்லை. இதுதான் இன்றைய நிஜம்.

அதனால நாம நமது உறவுகளோடும் சரி....ஏனையவர்களோடும் சரி அன்பாகப்பேசி, அவர்களை நேசித்து இருக்கும் போதே நல்ல சந்தோசமாக வாழ்வோம்.

என்ன பிள்ளைகளே அப்ப நான் போயிட்டு வாறன்....

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு.
(75)
விளக்கம்:
இவ்வுலகத்தில் இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு, அவர் அன்புடையவராய் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர்.
************************************************************************************

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும்
தனிமதி.